சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.36 திருப்பைஞ்ஞீலி
பண் - கொல்லி
காருலாவிய நஞ்சையுண்டிருள்
    கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி
    ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபர
    விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
1
சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
    வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
    பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
    மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணீய விடங்கரே.
2
தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
    துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு
    பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
    பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணீய விடங்கரே.
3
செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்
    அரவமுன்கையில் ஆடவே
வந்துநிற்குமி தென்கொலோபலி
    மாற்றமாட்டோம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
    கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
4
நீறுநுந்திரு மேனிநித்திலம்
    நீணெடுங்கண்ணி னாளொடுங்
கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந்
    திடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்டலை கையிலேந்திபைஞ்
    ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
5
குரவம்நாறிய குழலினார்வளை
    கொள்வதேமொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே
    நடந்துபோகவும் வல்லிரே
பரவுநாடொறும் பாடுவார்வினை
    பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
6
ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர்
    என்பெலாமணிந் தென்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையது
    காதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ்
    ஞீலியேனென்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
7
மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
    கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
    வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
    ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
8
தக்கைதண்ணுமை தாளம்வீணை
    தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை
    கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்
    ஞீலியேனென் நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
9
கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு
    கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்
    வேதமோதுதிர் கீதமும்
பையவேவிடங் காகநின்றுபைஞ்
    ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும்
    ஆரணீய விடங்கரே.
10
அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
    ஆரணிய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
    வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
    றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமை
    கேள்வன்சேவடி சேர்வரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com